பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சட்டமன்ற துணைத் தலைவர் பாதுகாப்பு வளையத்தின் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 35க்கும் அதிகமானோர் காயமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல்சபை துணை தலைவர் அப்துல் கஃபூர் ஹைதெரி இந்த தாக்குதல் தன் மீது குறி வைக்கப்பட்டதாகவும், இதில் காயங்களுடன் தப்பி பிழைத்ததாகவும் வெடிகுண்டு விபத்திற்கு பின் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என்றும் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட மருத்துவ அதிகாரி ஷெர் அகமது சடாக்சி தெரிவித்துள்ளார்.